இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன... இஸ்ரேலில் ஒரே இடத்தில் 260 பேர் கொன்று குவிப்பு..

கடந்த சில வாரங்களாகவே, யூதர்களின் பண்டிகையான சுக்கோட் உடன் இணைந்து தெற்கு இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடைபெறும் சூப்பர்நோவா இசை நிகழ்ச்சிக்காக பல இசைப் பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

"ஒரே குடும்பமாக ஒன்று சேர நேரம் வந்துவிட்டது," என்று இந்த நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தனர்.

அடுத்த சில மணிநேரங்களில் அந்த சமூக ஊடக பக்கம் முழுவதுமாக, தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் நபர்களின் பதிவுகளால் நிரம்பின.

தெற்கு இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியின் போது, பாலத்தீன பகுதியிலிருந்து வந்த ஆயுதக்குழு, கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

 "எதோ ஒரு தவறு நடந்ததற்கான அறிகுறியாக விடியற்காலையில் சைரன் ஒலி கேட்டது. அதைத்தொடர்ந்து ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டன. ராக்கெடுகளையடுத்து நாங்கள் இருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது," என தாக்குதலின் போது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஓர்டெல் தெரிவித்தார்.

"மின்சாரத்தை அவர்கள் துண்டித்தனர், எங்கிருந்தோ வந்த ஆயுதக்குழு திடீரென எல்லா திசைகளில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று அவர் இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சியிடம் கூறினார்.

"ராணுவ சீருடையணிந்த 50 பயங்கரவாதிகள் வேன்களில் வந்தனர்," என்று அவர் கூறினார்.

மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். மணல் பரப்பில் விரைவாக ஓடிச்சென்று கார்களில் ஏறி தப்பிக்க முயற்சி செய்த போது, ஜீப்களில் வந்த ஆயுதக்குழுவினர், கார்களை நோக்கி சுட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

நெகேவ் பாலைவனத்தில் நிகழ்ச்சி நடந்த மைதானம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு விழா மேடை, உணவு உண்ணும் இடம், பார், ஓய்வு எடுக்கும் இடம் என்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இடம் காசாவிலிருந்து வெகுதொலைவில் அமைந்திருக்கவில்லை. அதனால் இருள் சூழ்ந்த பிறகு வேலிகளை தாண்டி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வந்துள்ளனர். அங்கிருந்த பல கிராமங்கள், நகரங்களில் ஊடுருவி பலரை பணயக்கைதிகளாக பிடித்தனர்.


இஸ்ரேல் vs ஹமாஸ்


நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஆடம் பரேல் ஹாரெட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், அப்பகுதியில் ராக்கெட் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

மற்றவர்களை போலவே தானும் காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை நோக்கி சுட்டதாக அவர் தெரிவித்தார்.

“பலரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். நான் அங்கு ஒளிந்து கொண்டேன். மற்றவர்கள் வேறு எங்கோ ஓடிவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

“என் காரை நான் ஓட்டிச்சென்றபோது எனது வாகனத்தை அவர்கள் இடித்தனர். அப்போது வேறு ஒரு காரில் சென்ற இளைஞன் என்னையும் வருமாறு அழைத்தான். அவனுடைய காரில் நான் ஏறினே. ஆனால் ஆயுதக்குழுவினர் அவனை துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்றனர். நானும் இறந்தது போல நடித்தேன். கடைசியாக இஸ்ரேல் ராணுவம் வந்து என்னை மீட்டனர்,“ என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்தர் போரோச்சோவ் கூறினார்.

"என்னால் என் கால்களை அசைக்க முடியவில்லை. புதரில் இருந்த என்னை ராணுவ வீரர்கள் வந்து மீட்டர்," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்ற ஓர்டெல் போன்றவர்கள், அருகிலிருந்த புதர்களிலும், பழத்தோட்டங்களிலும் ராணுவம் வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் பல மணிநேரமாக ஒளிந்திருந்தனர்.

"நான் என்னுடைய தொலைபேசியை மியூட் மோடில் வைத்தேன், பின்னர் ஒரு ஆரஞ்சு தோட்டம் வழியாக ஊர்ந்து சென்றேன். எனக்கு மேலே பயங்கரமாக ராக்கெட் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது."

கிலி யோஸ்கோவிச், ஒரு பழத்தோட்டத்தில் எப்படி மறைந்திருந்தார் என்பதை பிபிசியிடம் விவரித்தார்.

"அவர்கள் ஒவ்வொரு மரமாகச் சென்று ஒழிந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் இறப்பதை நான் பார்த்தேன். நான் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தேன். நான் அழவும் இல்லை."

இறுதியில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் வீரர்களின் குரலைக் கேட்ட பிறகு அவர்களை நோக்கி சென்றதாக கிலி கூறினார்.

இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவசர சிகிச்சை மருத்துவரான யானிவ் அவரது அனுபவங்களை கன் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

"இது ஒரு படுகொலை. என் வாழ்நாளில் இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். அவசரகால வழிகளில் பொதுமக்கள் வெளியேறும் போது வாயிலில் காத்திருந்த எதிரிகள், அவர்களை கடத்திச் சென்றனர்."

இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஜேக் மார்லோவ் (26), மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.

ஷானி கடத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் நம்புகிறார். அதேபோல 25 வயதான நோவா அர்கமணியும் கடத்தப்பட்டுள்ளதாக அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கூறுகின்றனர்.

“8.30 மணிக்கு நோவாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கடைசியாக வந்தது. அதற்கு பிறகு அவர் சிறைபிடிக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அவளுடைய காதலனுடன் நோவா இருந்தபோது அவள் கடத்தி செல்லப்பட்டாள், “ என நோவாவின் நண்பரான அமிட் பிபிசியிடம் தெரிவித்தார்.

தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.